சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ஒன்பது மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வழக்குரைஞர் சங்கங்களுடன் காணொலி மூலமான ஆலோசனை கூட்டத்தை பார் கவுன்சில் நடத்தியது.
அந்தக் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், சென்னையில் உள்ள சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் கலந்துகொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலமான விசாரணையின் பாதகங்கள் குறித்தும், அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டுமெனவும் தலைமை நீதிபதியையும், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவையும் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், “காணொலி காட்சி மூலம் நடைபெறும் விசாரணை உகந்ததாக இல்லை. பெரும்பாலான சங்கங்கள் காணொலி கலந்தாய்வு ஒட்டுமொத்த தோல்வி எனச் சொல்லியுள்ளார்கள். இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.