சென்னை: மத்திய அரசு தாக்கல்செய்யும் பட்ஜெட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவதில்லை என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. திருநாவுகரசர் கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டம், குடியுரிமை பதிவேடு, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக, அனைத்து மாநிலங்களிலும் போராடிவருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை பல மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்துவது, வழக்குப்பதிவு செய்வது கண்டனத்துக்குரியது.
யாருடைய தூண்டுதலில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதைக் கண்டறிந்து, மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் தாக்குதலில் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் உள்பட சீனாவில் உள்ள தமிழ்நாடு மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். பொருளாதார நெருக்கடி, பின்னடைவு வைத்துக் கொண்டு, மத்திய அரசு ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.
சரக்கு மற்றும் சேவை வரியை மேலும் குறைக்கலாம். எந்தந்த பொருள்களுக்கு வரியை உயர்த்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வருமான வரியை ரூ.5 லட்சம் வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
வருமான வரி விலக்கு, வேலை வாய்ப்பு போன்ற விவகாரத்தில் நடவடிக்கை இருக்குமா, படித்து வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்பன போன்ற திட்டங்களை செய்ய வேண்டும்.
பற்றாக்குறை பட்ஜெட்டில் எதுவும் செய்ய முடியாது. பட்ஜெட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. நஷ்டத்தில் செல்வதால் பொதுத் துறை நிறுவனங்களை விற்க முடியாது என்று சுப்பிரமணியன் சுவாமி கேட்டுள்ளார். அரசே நஷ்டத்தில் இருப்பதால் அரசே விற்க முடியுமா என்று சுப்பிரமணியன் சுவாமி கேட்டு இருப்பது நியாயமான கேள்வி.
ஏர்-இந்தியாவை தனியார்மயமாக்கினால், பயணக் கட்டணங்கள் அதிகரிக்கும். மக்கள் நலன் கருதி, பொதுத் துறை நிறுவனங்களை அரசு தொடர்ந்து நடத்த முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க :அறிவியல் கண்காட்சியில் அசத்திய நரிக்குறவ மாணவர்கள்