சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்.24, 25: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 14 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
செப்.26 முதல் 28 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 18 செ.மீ, ஏத்தாப்பூர் 11 செ.மீ, சங்கரிதுர்க், நீடாமங்கலம் தலா 9 செ.மீ, செட்டிகுளம், நாவலூர் கொட்டப்பட்டு தலா 8 செ.மீ, அரவக்குறிச்சி, திருப்பூர் தலா 7 செ.மீ, கள்ளிக்குடி, ஆத்தூர் தலா 6 செ.மீ, திருப்பத்தூர், காரியாபட்டி, பாரூர், ஜமுனாமரத்தூர் தலா 5 செ.மீ, கூடலூர் பஜார், நீலகிரி, வலங்கைமான், எருமைப்பட்டி, பொன்னமராவதி தலா 4 செ.மீ, பாடாலூர், திருப்பத்தூர் கோபிசெட்டிபாளையம், தூத்துக்குடி தலா 3 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல்: இன்று (24.09.2021) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும்.
செப். 24 முதல் 26 வரை: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
செப். 27, 28: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
அரபிக்கடல்: செப் 27, 28 தேதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
ஆகையால், மேற்கூறிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு