சென்னை: ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இயற்கை வைரங்களைப் போலவே உறுதி, ஒளியியல், வேதியியல் பண்புகளைக் கொண்டிருப்பதாலும் உலக அளவில் அதற்கு நல்ல மதிப்பு உள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் (LGD) ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் குறித்த ஆய்விற்கு ஒரு ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு நிதி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் குறித்த ஆய்விற்காக சென்னை ஐஐடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலைச் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் குறித்த ஆய்விற்காக ரூ.242 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வைர சந்தையில் வணிக மற்றும் மின்னணு பயன்பாடுகளுக்கு உயர்ந்த தூய ரக வைரங்களின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் அதிகளவில் தூய வைரங்களை உருவாக்குவதற்கும், செயல்முறை அளவுறுக்களை மேம்படுத்துவதற்கும் முறையான ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. இந்த ஆய்வு உலகளவில் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களில் இந்தியாவை தலைவனாக்கும். இதற்காக சென்னை ஐஐடிக்கு 5 ஆண்டுகளுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது.