சென்னை: சென்னை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் இருவர் ரயிலில் இருந்து தவறி விழுவதும். அதில் ஆண் ஒருவர் மட்டும் சகபயணியால் காப்பாற்றப்படுவதும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தின் படி, விபத்தில் சிக்கியது ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த காருண்யா(24). இவர் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் சேர்ந்து விபத்தில் சிக்கிய மற்றொருவர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ்(29) என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காருண்யா தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் ராஜேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காருண்யா பணியாற்றும் நிறுவனத்திலிருந்து சக ஊழியர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளனர். அதன் படி நேற்று இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் கேரளா செல்ல திட்டமிட்ட காருண்யா மற்றும் அவரது நண்பர்கள், திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலின் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டியில் ஏறியுள்ளனர்.
இதையும் படிங்க: கடந்த 4 ஆண்டுகளில் கடத்தப்பட்ட ரேஷன் பொருட்கள் எவ்வளவு..? - அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!
அப்போது காருண்யாவை வழி அனுப்பி வைக்க அவரின் ஆண் நண்பரான புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ்(29) ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காருண்யா ரயிலின் படிக்கட்டில் நின்றுகொண்டு ராஜேஷூடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து அந்த ரயில் சரியாக 7.45 மணிக்குப் புறப்பட்ட நிலையில் காருண்யா திடீரென படிக்கட்டிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ரயில் தொங்கியபடி இருந்த அவரை ஆண் நண்பர் ராஜேஷ் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரும் கீழே விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த சக பயணி ஒருவர் துரிதமாக செயல்பட்டு ராஜேஷை காப்பாற்றினார். ஆனால் காருண்யா சிறிது தூரம் ரயில் மற்றும் நடைபாதை இடுக்கில் சிக்கி இழுத்துச்செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்ட நிலையில், நடைபாதை இடுக்கில் ரயில் பெட்டியோடு இழுத்துச்செல்லப்பட்ட காருண்யாவை அங்கிருந்த பயணிகள் விரைந்து மீட்டனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இளம்பெண் ரயிலுக்கு இடையில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய இளம்பெண்ணை உடனடியாக மீட்ட பயணிகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "திரெளபதி பட பாணியில் மோசடி" - வங்கி பெண் அதிகாரி கண்ணீர் மல்க புகார்!