சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று (நவ. 30) நடைபெற்றது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்குப் புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவர்கள் மற்றும் நியமன உறுப்பினர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவின்படி 2018-19ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கான இணைப்பு கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணைப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, மழலையர், நர்சரி, பிரைமரி தொடக்கப் பள்ளிகள், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளும் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்சி உயர்நிலைப் பள்ளிகள் 2,500 ரூபாயும், மேல்நிலைப் பள்ளிகள் 3,000 ரூபாயும் சந்தா செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கான சந்தா தொகை 1,200 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 800 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக சந்தா தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள் 100 ரூபாயும், நர்சரி பிரைமரி தொடக்கப் பள்ளிகள் 200 ரூபாயும் செலுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புயலை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. ஆட்சியர்களுக்கு அலர்ட் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!