சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கவும், உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி. விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை கேட்டு சிபிஐக்கு திரும்ப அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பான கடிதத்தை கடந்த விசாரணையின் போது சீலிட்ட கவரில் தாக்கல் செய்யபட்டாதகவும், மேலும் 2 பேருக்கு எதிரான விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பான கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது. குட்கா முறைகேடு தொடர்பாக 21 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் தங்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் வழங்க கோரியும், விசாரணை முழுமையாக முடிவடையவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவித்து உள்ளதால், அது முடிவடையும் வரை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என உத்தரவிட கோரியும் புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவிற்கு சிபிஐ தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.