டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆறாவது நாளான இன்றும் விசாரனை நடைபெற்றுவருகிறது. இதில் மேலும் ஒரு உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக சிபிசிஐடி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையில் உதவி ஆய்வாளராக உள்ள ஒருவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டுள்ளதாகச் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின.
அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, சகோதரர், சகோதரர் மனைவி என ஐந்து பேரை குரூப் 2 தேர்வில் முறைகேடாகத் தேர்ச்சி பெறவைத்து அரசு அலுவலர்கள் பதவிகள் பெற்றுத்தந்ததாகத் தெரியவந்துள்ளது. அதுவும் இவர்கள் அனைவரும் தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளதால் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விசாரணையில் இவர்கள் தேர்வெழுத ராமநாதபுரம் மாவட்ட தேர்ச்சி மையங்களையே தேர்ந்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது ஊரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரை தொடர்புகொண்டு தேர்ச்சிபெற பணம் பெற்றுக்கொண்டு உதவியதாகத் தெரியவந்துள்ளது.
ஆளும் கட்சிப் பிரமுகருக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் அவரது குடும்பத்தினரை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முக்கியத் தரகரான ஜெயக்குமாரை மூன்று நாள்களுக்கு மேலாகியும் பிடிக்கமுடியாமல் காவல் துறையினர் திணறிவருகின்றனர்.
அவர் பிடிபட்டால்தான் இந்த முறைகேட்டில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி அலுவலர்களைப் பிடிக்க முடியும் எனக் காவல் துறையினர் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கைதுசெய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க:முறைகேடு புகார் எதிரொலி: குரூப் 4 தேர்வை மீண்டும் நடத்த வலியுறுத்தல்