சென்னை: சென்னை மாநகரில் டிராஃபிக் ரூல்ஸ் எல்லாம் உங்களுக்குத்தான், எங்களுக்கு இல்லை என்ற நினைப்பில் அசைபோட்டுக்கொண்டு இஷ்டத்திற்குச் சுற்றித் திரிகின்றன கால்நடைகள். வாகன போக்கு வரத்து நிறைந்த சாலைகள், தெருக்கள் என்றெல்லாம் எந்த கணக்கும் கிடையாது, எல்லா ஏரியாவும் எங்க ஏரியாதான் என்ற வகையில் அவைகளைக் கட்டவிழ்ந்து விட்டிருக்கிறார்கள் கால்நடை உரிமையாளர்கள்.
இந்த கால்நடைகளால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, திருநின்றவூர், வெளிவட்ட சாலை, சென்னை-செங்கல்பட்டு புறவழிச்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுவதாக மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கால்நடைகளால் ஏற்படும் இத்தகைய ஆபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு என்னதான் தீர்வு, அதிகாரிகள் கூறுவது என்ன?
PREVENTION OF CRUELTY TO ANIMALS ACT, 1960-ன் படி கால்நடைகளைத் தெருவில் அபாயகரமாக விடுவது குற்றச்செயல். இதற்குத் தண்டனை வழங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவைகளைப் புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.
கால்நடைகளைத் திரும்பக் கேட்டு வரும் அதன் உரிமையாளர்களிடம் இரண்டு நாள் பராமரிப்பிற்கான செலவுத் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது. இந்த அபராதத்தைப் பலரும் பெரிதாகப் பொருட்படுத்துவது இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது; சமீபத்தில் சென்னை அரும்பாக்கத்தில் பள்ளிக்கூடம் சென்று, வீடு திரும்பிய மாணவி சாலையில் சென்ற மாடு முட்டி படுகாயம் அடைந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மாநகராட்சி முழுவீச்சில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து பறிமுதல் செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னையில் மாடு வளர்க்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 36 அடி இடம் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மாடு வளர்க்கும் நபர்கள் மாடுகளைச் சாலையில் திரிய விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவித்த அதிகாரி, இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 800 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 51 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உரிமை கோராத மாடுகள் ப்ளூ க்ராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ப்ளூ க்ராஸ் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளர் வினோத் குமாரிடம் கேட்டபோது; கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதைத் தடை செய்யும் வகையில் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் அபராத தொகையையும், தண்டனையையும் அறிவித்தாலும் கால்நடை வளர்ப்பவர்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை எனக்கூறியுள்ளார்.
PREVENTION OF CRUELTY TO ANIMALS ACT, 1960- ன் படி கால்நடைகளைத் தெருவில், அபாயகரமாக விடுவது குற்றச்செயல் ஆகும் எனக்கூறிய அவர், கால்நடைகள் சாலைகளில் விடப்படுவதால், அவை உணவுக்காக, சாலையோரத்தில் இருக்கும், பிளாஸ்டிக் பைகள், இரும்பு ஆணிகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்களை உணவு என நினைத்து உட்கொண்டு விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் கரவை குறையும் மாடுகளை 90 சதவீதம் உரிமையாளர்கள் பராமரிக்காமல் சாலைகளில் விட்டு விடுவதாகவும் வினோத் குமார் கூறியுள்ளார். மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் சுமார் 210 மாடுகளை தங்களிடம் ஒப்படைத்ததாகவும், இதைப் பராமரிக்க மாநகராட்சி சார்பில் தங்களுக்கு நிதி வழங்கப்படுவது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு சுங்கவாச்சத்திரம் பகுதியில் உள்ள தங்களின் கிளை அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 60 மாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கடைசியாகக் கால்நடைகள் சாலைகளில் விடப்படுவதால் மனிதர்களுக்கு மட்டும் அல்ல அந்த கால்நடைகளுக்கும் ஆபத்துதான் எனத் தெரிவித்த ப்ளூ க்ராஸ் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளர் வினோத் குமார் இந்த விவகாரத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக ஆர்வலர்களின் கருத்து ; கால்நடை வளர்ப்பவர்கள் அதை வியாபார நோக்கத்தோடு மட்டும் பார்க்காமல் ஒரு உயிராக நினைத்து, வீட்டில் உள்ள ஒரு உறுப்பினர் போல் கருதி, கிராமப்புறங்களில் மாடு வளர்க்கும் மக்களின் எண்ணத்தோடு பார்த்தால் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்படும் கால்நடைகளைப் பராமரிக்கத் தேவையான பொருளாதார நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன் அடிப்படையில், கால்நடைகள் வளர்ப்பதற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5,000 வரை அபராதமும் விதிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி கொடுத்து தன்னம்பிக்கையூட்டும் புகைப்பட கலைஞர் - பொதுமக்கள் பாராட்டு