வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல பிகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கில் கருத்துக்களை பதிவிட்டோர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலியான தகவல்களை பரப்பி வருவதாக கூறி அந்த ட்விட்டர் கணக்கை முடக்கவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், வதந்தி பரப்புதல் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவது போல வெளியான வீடியோ ஒன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து காணப்படுகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் வடமாநில தொழிலாளர் ஹோலி பண்டிகை கொண்டாவே செல்வதாகவும், தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சம் இல்லாமல் பாதுகாப்புடன் இருக்கின்றனர். இவர்களிடையே அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இப்படி பொய்யான செய்தி பரப்புவோர் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்குச் சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை வாழலாம் என்பதே வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணமாக உள்ளது. அதுவே அவர்கள் இங்கு வருவதற்கான காரணமாகும். அனைவருமே தமிழ்நாட்டின் தொழிலாளர்கள்தான். வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வதந்தி செய்திகள் மற்றும் வீடியோ பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்களாவர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசிற்கு துணை நிற்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வலியுறுத்தல் - அண்ணாமலை அறிக்கை