சென்னை: தாம்பரம் அடுத்த டிடிகே நகரைச் சேர்ந்தவர் ஷீபா (36), இவரது கணவர் தேவராஜ் திமுகவில் உள்ளார். தாம்பரம் ஜெருசலம் பகுதியைச் சேர்ந்த 53 ஆவது வார்டு அதிமுக வட்ட செயலாளராக குமணன் (47) இருந்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், ஷீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ஷீபா அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் அதிமுக வட்ட செயலாளர் குமணன் அப்பெண்ணிற்கு ஆபாசமாக பேசி குரல் பதிவும், குறுஞ்செய்தியும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறபடுகிறது.
இது குறித்து ஷீபா அவரது கணவர் தேவராஜிடம் தெரியபடுத்தவே தேவதாஜ், இது குறித்து குமணனிடம் கேட்டபோது ஏற்பட்ட தகராறி தேவராஜ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஷீபா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அதிமுக பிரமுகர் குமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடிகை விந்தியா குறித்து அவதூறு வீடியோ பரப்பிய திமுக நிர்வாகி: திமுக நிர்வாகியும், பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியாவை பற்றி ஆபாசமாகவும், அருவருத்தக்க வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ தொடர்பாக அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை, விந்தியா சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். பின்னர் இந்த புகார் மனுவை தேசிய மகளிர் ஆணையம் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி, உடனடியாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து விந்தியாவிடம் புகாரை பெற்றுக் கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், ஆபாசமாக பேசுதல், பெண்ணை அவமரியாதையாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆள் மாறாட்டம் செய்து ரூ 1.50 கோடி நிலம் விற்பனை செய்த பெண் கைது: அம்பத்தூர் லெனில் நகர் 20 ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் அம்பத்தூர் அருகே கொரட்டூர், ஸ்ரீ மூகாம்பிகை நகரில் 4ஆயிரத்து 800 சதுர அடி நிலத்தை அதன் உரிமையாளர்களான திருநாவுக்கரசு, கேசவன் ஆகியோர் மூலம் பொது அதிகாரம் முகவரான சுப்பிரமணியம் என்பவரிடம் கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பகுதியை விற்க முடிவு செய்து, மீதியுள்ள இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து வில்லங்கச் சான்றை சரிபார்த்துள்ளார். அப்போது தனது நிலத்தை அரியலூர் மாவட்டம் சின்னவளையம் கிராமம் குடியாத்தம் தெருவைச் சேர்ந்த ஜோதி என்பவரது மனைவி விஜி (44) என்பவர் சுப்பராயுடு, பழனி, அஜய், புவனேஸ்வரி ஆகியோருக்கு 3 ஆக பிரித்து விற்பனை செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடியாகும். போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்பனை செய்த விஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்தில் ராஜாராமன் சமீபத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேற்கண்ட வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த விஜியை நேற்று (ஜூலை 18) கைது செய்தனர்.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - சிக்கிய கடிதத்தில் இருந்தது என்ன?