சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கான, எழுத்துத் தேர்வு 2022ம்ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பித்திருந்த நிலையில், 18,36,535 தேர்வு எழுதி இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி, குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274 இல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593 இல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108இல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் மார்ச் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுவதாக தேர்வர்கள் பகிரங்கமாக ஆடியோ வெளியிட்டுள்ளனர். இது தற்பொழுது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற தேர்வில் ஆடு மேய்ப்பவர் முதல் இடத்தை பிடித்தார் எனவும் அதன் மீது நடத்தப்பட்ட விசாரணை என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற 2000 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தேர்வு மையத்திலிருந்து தேர்வு பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கின்ற தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் 40க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருகின்றது. இதில் பயின்ற மாணவர்கள் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு தேர்வு மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்து விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதனால் தற்போது நடந்து முடிந்த குரூப் - 4 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற ஐயத்தில் தேர்வர்கள் உள்ளனர்.
மேலும் இந்த முறை குரூப் - 4 தேர்வு முடிவு வெளியான போது பலருக்கு தேர்வு முடிவுகள் வராமல் invalid என்று இருந்துள்ளது. ஓஎம்ஆர் ஷீட்டில் செய்த தவறு காரணமாக அவர்களது முடிவுகள் வெளியிடப்படவில்லை என தகவல் வெளியான நிலையில் அதிருப்தி அடைந்த தேர்வர்கள் பலர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர்.