சென்னை: கனமழை காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 11:20 மணிக்கு, சேலம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2 மணிக்கு ஆந்திர மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதே போல் இன்று காலை 10:15 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் ஏர்லைன்ஸ் சர்வதேச பயணிகள் விமானம், அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து, இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் இன்று அதிகாலை 2 மணிக்கு, இலங்கையில் இருந்து சென்னை வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 8:15 மணிக்கு, ஷங்காயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வர வேண்டிய எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1:45 மணிக்கு, சேலத்திலிருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 4:50 மணிக்கு, ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் சேலம் மற்றும் கர்னூல் விமானங்கள், சிறிய ஏடிஆர் ரக விமானங்கள் ஆகும். இதனால் தற்போது, சென்னை வான்வெளியில் மோசமான வானிலை நிலவுவதால் பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இலங்கை மற்றும் அபுதாபி விமானங்கள், சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்தந்த விமான நிறுவனங்களே விமான சேவைகளை இன்று ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதேபோல் சென்னைக்கு வர வேண்டிய இலங்கை, மஸ்கட், அபுதாபி உள்ளிட்ட ஐந்து விமானங்கள் தாமதமாக வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக, இதுவரையில் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, வருகை, புறப்பாடு உள்ளிட்ட 15 விமானங்கள் கால தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: சென்னை மழை: அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!