சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக கனமழை பெய்து, அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
அவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கியதோடு வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்தார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (நவம்பர் 20) மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெள்ள பாதிப்பு நடவடிக்கையின்போது அமைச்சர்களின் செயல்பாடுகள், அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துதல், புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.
இதையும் படிங்க: நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியைத் தடுக்க மு.க. ஸ்டாலின் புது வியூகம்