சென்னை: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று (ஜன.9) ஈடுபட்டுள்ளதால், சென்னையில் போதிய பேருந்துகள் இயங்காததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
6 அம்ச கோரிக்கை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
பேச்சுவார்த்தை தோல்வி: இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், போக்குவரத்துக் கழகங்களுடன், ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (ஜன.8) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
வேலைநிறுத்த போரட்டம்: வேலைநிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு, நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர். முதல் முதலாக திருவான்மியூா் மாநகரப் பேருந்து பணிமனையில், வேலைநிறுத்த அறிவிப்பு ஒட்டப்பட்டு, பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் மாநகரப் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
பயணிகள் அவதி: பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொலைதூர பேருந்தில் வந்தவர்கள் கால் டாக்ஸி, ஆட்டோ மற்றும் வாடகை வாகனத்தில் செல்கின்றனர். மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக வந்த பயணிகள், போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம், காலை 6 மணி நிலவரப்படி, சென்னை மாநகரின் அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் 2 ஆயிரத்து 98 பேருந்துகள் இயக்கப்படுகிறது என மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஈரோட்டில் 700க்கும் மேற்பட்ட பேருந்துகளும், 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பகல் நேரங்களில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சர் அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விழுப்புரம் கோட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்!