இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதாலும், 4ஜி, 5ஜி என தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் நவீனமயமாக்கலில் இந்நிறுவனம் பின்தங்கியிருப்பது உள்ளிட்ட காரணிகளால் இந்நிறுவனத்திற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் இந்நிறுவனத்தை மத்திய அரசு இழுத்துமூடும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மொத்தமாக மூடாமல் ஆட்களை குறைத்து தொடர்ந்து நடத்தலாம் என்று மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதனால் பலர் வேலையிழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மாத ஊதியம் வழங்குவதிலும் பிஎஸ்என்எல் நிர்வாகம் கடும் சவால்களை எதிர்கொண்டுவருகிறது. ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக ஊழியர்களுக்கு சரியான தேதியில் ஊதியத்தை வழங்காமல் இந்நிறுவனம் இழுத்தடித்துள்ளது.
இந்நிலையில், ஊதிய விவகாரங்களுக்கு உடனடி தீர்வு கோரி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டங்களின்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை கடன் சுமையிலிருந்து மீட்க எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், இதுபோன்ற சிக்கல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நிரந்தரமாக நிறுவனத்தை மூடுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.