சென்னை: கடந்த ஆறாம் தேதி பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். நாடு முழுவதும் ஒன்பது மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் சுமார் 50 நாடுகளுக்கும் மேல் கிளைகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பான டோலோ 650 மாத்திரையை கரோனா காலத்தில் அதிகப்படியாக விற்பனை செய்து கணக்கில் காட்டாமல் வருமானத்தை மறைத்திருப்பதாக அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது விதிகளை மீறி தங்கள் நிறுவன மருந்துகளை விற்பனை செய்வதற்காக விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற பெயரில் மருத்துவத்துறை சார்ந்த நபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தது தெரியவந்துள்ளது.
டாக்டர்களின் பரிந்துரைக்குப் பின் இருப்பது இதுதானா? குறிப்பாக கரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் டோலோ 650 போன்ற மருந்துகளை பரிந்துரை செய்வதற்காக அவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணம், பரிசுப்பொருட்கள், இலவசங்கள் என இந்நிறுவனம் செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கருத்தரங்கு மாநாடு, மருத்துவ அறிவுரைகள் வழங்கியது எனப் பல்வேறு முறையில் செலவுகளை கணக்கு காட்டி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் செலவிட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு முறையில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததையும் அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி சலுகைகளை தவறாகப் பயன்படுத்தி வருவாயினைக் குறைத்துக்காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு குறைவாக நிதி ஒதுக்கியதாகவும் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக சுமார் 300 கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித்துறை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதேபோன்று மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் மற்றுமொரு வரிச்சலுகை தவறாகப் பயன்படுத்தி மூன்றாம் நபர் தயாரிப்பு நிறுவனங்களிடம் பெருமளவு உற்பத்தி செய்வதிலும் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சோதனையில் கணக்கில் வராத சுமார் 1.20 கோடி ரூபாய் ரொக்கப்பணமும் மற்றும் தங்கம் மற்றும் வைர நகைகளாக 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கரோனா காலகட்டத்தில் அதிக அளவு ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனை எடுத்த விவகாரத்தில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக ஆர்த்தி ஸ்கேன் என்ற நிறுவனத்தின் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித்துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோடி கணக்கில் விற்பனையான டோலோ-650 மாத்திரைகள் - நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு