சென்னை: இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டதொடர் நேற்று (ஜனவரி 9) ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 10) மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நாள் முழுவதும் சட்டமன்ற நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "நேற்று நடந்த சம்பவம் அருவருப்பான ஒரு சம்பவம். திமுக கூட்டணி கட்சியினர் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து நடந்து கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து நடந்து கொண்டனர்.
ஆளுநர் ஒரு கருத்தை சொல்கிறார், அதை அவர் கட்டாயப்படுத்தவில்லை. அவர் சொல்கின்ற கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருந்தால் கருத்துக்களால் எதிர்கொள்ளலாம். அதனை விட்டு விட்டு போஸ்டர் அடித்து ஒட்டுவது, போராடக் கூடிய மனநிலைக்கு வருவது, எந்த அளவுக்கு கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கிற பண்பு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது" எனறார்.
பொங்கல் நிகழ்ச்சி தொடர்பாக ஆளுநர் அழைப்பிதழ் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி, "மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது தமிழகம் என சொல்லவில்லையா? தமிழகம் என்ன சட்டவிராத வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா? ஏன் இப்படி ?
பேசுவதற்கு மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது பால் விலை, மின்சார கட்டணம் உயர்வு மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை திசை திருப்பும் விதமாக பிரச்சினையாக கிளப்புகிறார்கள். இங்கு எது செய்தி இல்லையோ அதை செய்தியாக முயற்சிக்கின்றனர். ஆளுநர் அனுப்பிய அழைப்பிதழ் குறித்து பேசுவதற்கான நபர், நான் இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமாகா வலுவான கூட்டணியில் உள்ளது - ஜி.கே. வாசன்