சென்னை: கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர, சகோதரிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ஆண்டு தோறும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையை, பட்டியலின சமுதாய சகோதர, சகோதரிகளின் நலனுக்காகச் செலவிடாமல் திருப்பி அனுப்புவது திறனற்ற திமுக அரசின் வழக்கம். பட்டியலின சமுதாயத்தினரின் பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு போன்றவை எதுவுமே நிறைவேற்றவில்லை.
சென்ற ஆண்டு பட்டியலின சமுதாயத்தினருக்காக மத்திய அரசு வழங்கிய சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது திமுக. ஆனால் தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக புதியதாக நிதி எதுவும் ஒதுக்காமல், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நல நிதியை மடைமாற்ற முயற்சித்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பட்டியலின சமுதாய சகோதர, சகோதரிகள் நல நிதியை, பட்டியலின சமுதாய மக்கள் நலனுக்காக மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க: "இந்தியா ஒரே குடும்பமாக முன்னேறி வருகிறது..." சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் பேச்சு
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து, பின்னர் தகுதி உடைய மகளிருக்கு மட்டும் என்று ஏமாற்றிய கூட்டம். தற்போது பட்டியலின சமுதாயத்தினர் நல நிதியைப் மடைமாற்ற முயற்சிப்பது என்பது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, பிறர் மேல் பழி சொல்லி கைவிட்டு விட்டு, தமிழக சகோதரிகளை முழுமையாக ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
உடனடியாக, இந்தக் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நல நிதியை, அதற்கான நோக்கத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதைக் காரணமாகச் சொல்லி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இருந்தால், தமிழக சகோதரிகள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: "அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!