சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் குஷ்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கையர்கண்ணியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். அப்போது, பாஜக மாநிலச் செயலாளர் கரு. நாகராஜன், கு.க. செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, "அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதால் அவர்களுக்குச் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காது. பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிக்கட்சிகள் பொய் பரப்பிவருகின்றன.
தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, தொடர்ந்து 10 ஆண்டுகால அதிமுகவை ஆட்சி அதிகாரத்திலும் மக்கள் அமரவைத்துள்ளனர்.
என் அகராதியில் பயம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியைச் சந்திக்காத நான் இந்தத் தேர்தலில் கட்டாயம் வெற்றிபெறுவேன்" என்றார்.
திமுக கோட்டையாக ஆயிரம் விளக்கு இருப்பின் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், "கமல் போன்றவர்கள் மாற்று அரசியல் அமைக்க களம் காணுவதாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவே மாற்று அரசியலை வழங்கும். நான் ரஜினியிடம் நேரில் சென்று ஆதரவு கேட்கவில்லை. நிச்சயம் அவரது ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்யவந்த குஷ்புவிற்கு மேளதாளங்கள் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தனர்.