சென்னை: பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக நான் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்துவிட்டு ஆளுநர் காரில் தாக்குதல் நடத்தப்படவில்லை என முதலமைச்சர் கூறட்டும். இந்தியாவில் போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்திலேயே இடம் ஒதுக்கிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்.
ஆளுநரை கொலைகாரர் எனக் குறிப்பிட்ட வாசகத்துடன் போராடியுள்ளனர். மத்திய அரசை எதிர்ப்போர் பல்வேறு பெயரில் போராட வந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் ஆளுநர் வாகனம் மீது எந்த தாக்குதலும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் மற்றும் காவல் துறையினர் நம்மிடம் இருந்தனர். கருணாநிதியுடன் சித்தாந்த வேறுபாடு இருந்தாலும் அவர் இப்படி செயல்பட்டதில்லை, முதலமைச்சர் அரசை இயக்குகிறாரா? அல்லது வேறு யாரும் இயக்குகின்றனரா? இதில் அரசியல் செய்வது முதலமைச்சவர் தான், பாஜக அல்ல.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். இதில் 2021ஆம் ஆண்டு முதல் எங்கள் ஆதரவு நிலைப்பாடு மாறவில்லை, மாறாது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால் அதில் பங்கேற்று எங்களது கருத்தைக் கூறுவோம். வரும் 24ஆம் தேதி அமித்ஷா புதுச்சேரி வருகிறார், ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதல் குறித்து நேரில் முறையிடுவோம். எனது கடிதம் குறித்து உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். ஆளுநரின் இன்றைய டெல்லி பயணம் தொடர்பாக நான் கருத்துக் கூற முடியாது, ஆளுநர் வேறு, பாஜக வேறு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எங்களிடம் இல்லை. தமிழ்நாட்டில் 70 விழுக்காடு திரையரங்குகளை நாங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவில்லை. மேலும் சினிமாக்காரர்களுக்கு பாஜக தொல்லை கொடுப்பதில்லை என்பதால் திரைத்துறையில் பலர் எங்களை ஆதரிக்கின்றனர். திரைத்துறையை திமுக நசுக்கி வருவதாக பலரும் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். இதுவரை அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் நடத்தியோர்தான் இளையராஜாவுக்கு எதிராக குறை கூறுகின்றனர்.
இளையராஜா மோடியை ஒப்பிட்டதில் என்ன தவறு..? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக விவாதிக்க திருமாவளவன் தயாரா..?. அருந்ததியர் சமூகத்தில் மிகப்பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜக பின்பற்றுவதால்தான் பாஜகவில் இணைந்தார். இளையராஜாவுக்கு ராஜ்ய சபா கொடுப்பதாக கூறினால், அவரது தகுதியை அது குறைக்கும். இளையராஜாவின் தகுதிக்கு பாரத ரத்னாவே குறைவுதான்.
இந்திரா காந்தி மீது கல்லெறிந்தவர் யார்?: மதுரை வந்த இந்திரா காந்திக்கு கல் எறிந்து, ரத்தம் வரவைத்து, பெண்களுக்கு மாதமாதம் ரத்தம் வருவது இயல்புதான் எனக் கூறியது யார்..? அது கருணாநாதிதானே. கே.எஸ். அழகிரி திமுகவின் இந்த செயல் குறித்து ஆதரவு தெரிவிப்பாரா..?.
ஆளுநருக்கு நேற்று நடந்தது மிகப்பெரும் தவறு. இது அதிகளவில் ஊடகங்களில் பேசப்பட வேண்டும். ஆளுநர் குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசுவதும், வெளியில் நடப்பதும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. 'அந்நியன்' பட அம்பி போல மாற்றி மாற்றி பேசுகிறார், முதலமைச்சர்.
ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசுவது கண் துடைப்பு போல உள்ளது. முதலமைச்சர் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமனால் ஐபிசி பிரிவு 124-ன் படி போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தவிர்த்து மேலும் நிலுவையிலுள்ள 11 மசோதா குறித்து சபாநாயகருக்கு ஆளுநர் சில கேள்விகளை அனுப்பியுள்ளார்.
இதை வெள்ளை அறிக்கையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். மசோதா குறித்த ஆளுநர் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஆளுநர் மேல் அரசு பழிபோடுவது சரியல்ல” என்றார்.
இதையும் படிங்க: கர்நாடக அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை- அமைச்சர் தகவல்!