சென்னை: ‘பன்னிரு திருமுறை திருவிழா’ மற்றும் 108 ஓதுவா மூர்த்திகள் மந்திரங்கள் முழங்க நடராஜர் திருச்சபையில் இன்று (டிச. 16) மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக அரசு பேரிடர் காலத்தை மோசமாகக் கையாண்டதை முதலமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும்.
வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும். பொலிடிக்கல் இம்மெச்சூரிட்டியை தமிழகத்தில் முதன் முறையாகப் பார்க்கிறேன். மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி நிச்சயமாக வந்து சேரும். மத்திய அரசின் அதிகாரிகள், மாநில அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள், அது ஒரு மாண்பு.
தமிழகத்தில் திமுக செயல் இழந்து நிற்கிறது. பேரிடரை மோசமாக கையாண்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் வந்த நான்கு அதிகாரிகள் கொடுத்த சான்றிதழை அறிக்கையாகக் கொடுத்து இருக்கிறார்கள். ஐந்து நாட்களாகத் தண்ணீரில் இருந்தவர்கள் பொய் கூற மாட்டார்கள். நாங்களும் பொய் சொல்ல மாட்டோம்.
பாஜகவை விடப் பழமையான கட்சி திமுக. ஆனால், மன்னர் தேரில் செல்வது போல் திமுகவில் உள்ளவர்கள் பேரிடரில் மக்களைக் காணச் சென்றார்கள். ஆனால், இந்தப் பேரிடர் சமயத்தில் படகிலும், கழுத்தளவு தண்ணீரிலும் ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் சென்று மக்களுக்கு உதவி இருக்கிறார்கள்.
திமுக அரசு பாஜகவைக் குறை கூறுகிறது என்றால் நாங்கள் வளர்ந்து விட்டோம் என்று அர்த்தம். மக்களுக்குத் தேவையான இடங்களில் நாங்கள் நிற்கின்றோம் என்று அர்த்தம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தி.மு.க எம்பிக்கள்..!