கற்போம் எழுதுவோம் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"தமிழ்நாட்டில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3 லட்சத்து 10 ஆயிரம் கல்லாதோருக்கு, 2020-21ஆம் ஆண்டிற்குள் அடிப்படை எழுத்தறிவை வழங்குவதற்கு கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற வயது வந்தோர் கல்வித் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவருகின்றது.
இந்தத் திட்டத்தின்கீழ் கண்டறியப்பட்டுள்ள கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15 ஆயிரத்து 823 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன், கற்போருக்கான பயிற்சி புத்தகத்தை கொண்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை மேலும் வலுவூட்டும் வகையில், கற்போர் பயிற்சி புத்தகத்திலுள்ள தமிழ் மற்றும் கணித பாடங்கள் ஒலி மற்றும் ஒளி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் படித்து வரும் கற்போர்கள் பயன் பெறும் வகையில், அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார்ந்த பாடங்கள், இன்று முதல் கல்வித் தொலைக்காட்சியில் மாலை 7 மணி முதல் 7.30 மணி தினந்தோறும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.