சென்னை: நவம்பர் 7 புரட்சி தினத்தை முன்னிட்டு இன்று (நவ.7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றிய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "நவம்பர் 7ஆம் நாளானது, சோசலிசத்தை உருவாக்க ஜனநாயக புரட்சியை முன்னெடுத்த நாளாகும். தற்பொழுது இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. சாதாரண ஏழை மக்களை காவு கொடுத்து, அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் பணக்காரப்பட்டியலில் இடம் பிடித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய, ஆட்சியை அகற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து இந்த ஆட்சியை அப்புறப்படுத்தும் என நவம்பர் 7 புரட்சி நாளான இன்று உறுதியேற்கிறோம். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வேறு மாநிலத்திற்கு ஆளுநராக இருந்துகொண்டு தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்வதற்கு எந்த விதத்தில் தார்மீக உரிமை இருக்கின்றது என்பதுதான் கேள்வி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிற கட்சிகள், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யலாம். ஆனால், ஆளுநர் விமர்சனம் செய்வது சரியல்ல.
எங்கள் கட்சியைப் பொறுத்த அளவுக்கு மக்கள் மீது சுமை ஏற்றக்கூடிய எந்த ஒரு விலை ஏற்றத்தையும் நாங்கள் ஏற்கவில்லை. பால் கொள்முதல் விலை ரூ.3 ஏற்றப்பட்டதன் காரணமாக ஆரஞ்சு பால் பாக்கெட் ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றில் மக்கள் மீது சுமையை ஏற்றாமல் இருக்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ். அவர்கள் நினைத்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. இந்த அனுமதியை எப்பொழுதும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவெறி இயக்கம்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் அறிக்கையில் வேதாந்தா நிறுவனம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றுவதற்கு எங்கள் மீது அவதூறு பேசுகிறார். அவதூறு பேசி உண்மைகளை மறைக்க நினைக்கின்றார். நாங்கள் துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது, இந்த குற்றச்சாட்டை வைக்கவில்லை. அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி தான், வேதாந்த நிறுவனத்தையும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டுமெனக் கூறி இருந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மூக்கையும் தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை