சென்னை: கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எரி மற்றும் குளங்கள் நிரம்பியதால் அவை திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாகச் சென்னையின் சில முக்கிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுப் பல குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. அப்படித் திறந்து விடப்பட்ட ஏதோ ஒரு ஏரியில் இருந்து சுமார் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று பெருங்களத்தூர் அடித்து வரப்பட்டது.
இந்த முதலை பெருங்களத்தூர் முக்கிய சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவம் அரங்கேறிய அடுத்த 4 நாட்களில் அதே சாலையில் ஒன்பது அடி முதலை ஒன்று படுத்திருப்பதைக் கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினரும் அந்த முதலையைப் பிடித்துச் சென்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஜன.01) இரவு அதே சாலையில் ஒன்பது அடி முதலை ஒன்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழி சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து முதலை குட்டியை மீட்டுக் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: 2024-ம் ஆண்டில் சென்னை ஐஐடி; 100 புத்தாக்க நிறுவனங்களின் தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு!