சென்னை: பெருநகர மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3,200-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகரத்தில் மட்டும் சுமார் 1,050-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களும் (MTC Bus Shelters), இதில் அதிகமாக கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய 250 இடங்களில் பேருந்து பயணிகளுக்காக தனிப்பட்ட முறையில் பேருந்து நுழைவாயில் (Bus Bay) இருக்கிறது.
இருப்பினும், இந்த பேருந்து நுழைவாயிலில் பெரும்பாலானவை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், பேருந்து பயணிகள் தங்களது பேருந்துகளை அடையாளம் காண முடியாமல் சாலைகளின் முன்பே நிற்கின்ற அவலம் ஏற்படுகிறது. மேலும் மாநகர பேருந்து அதிகாரிகள் (MTC) இது போன்ற பிரச்னைகளை கண்காணிக்க ஊழியர்களை நியமித்துள்ளதாக கூறினாலும், ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகர பேருந்து ஓட்டுநர்களின் பார்வையில்: இது குறித்து மாநகர பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், 'ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள், இந்த தனிப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் நுழைவாயிலில் நிற்கும்போது, நேரத்தை மிச்சப்படுத்த நாங்கள் இந்த நுழைவாயிலை கடந்து செல்ல கட்டாய நிலை உள்ளது" என்றார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளின் அவல நிலையைக் கேட்டபோது, “இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் காலை, மாலை நேரங்களில் நிகழ்கின்றன. எனினும், இதனை மாநகர பேருந்து அதிகாரிகள் தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.
பெரும்பாலான பயணிகளின் புகார் படி, பெரும்பாலான பேருந்துகள் நியமிக்கப்பட்ட நிறுத்தங்கள் அல்லது பேருந்து நிறுத்தங்களில் நிற்காமலோ, கடந்தோ அல்லது பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்து அங்கேயும் இங்கேயும் ஓடி அலைந்து, இறுதியில் பேருந்துகளை தவறவிடும் நிலை உள்ளது என கூறுகின்றனர். மேலும், இந்த நடைமுறையால் மூத்த குடிமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற பிரச்னைகளை கண்காணிக்க ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின் நுழைவாயிலில் எம்.டி.சி ஊழியர்களை நியமிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.
குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள்: இது குறித்து நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாநில செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, 'இந்த சம்பவம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தாலும், இதற்கான ஒரு தீர்வு இன்றளவிலும் எட்டப்படவில்லை. மேலும், ஆட்கள் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. போக்குவரத்து துறையும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இதனை கண்காணிக்க தவறுகிறார்கள்' என அவர் குற்றம்சாட்டினார்.
இது குறித்து சென்னையை சார்ந்த சமூக ஆர்வலர், பி. விஸ்வநாதன் கூறுகையில், 'இந்த விஷயத்தை பொறுத்தமட்டில் எம்.டி.சி அதிகாரிகள் மட்டுமல்லாமல், காவல் துறை அதிகாரிகளும் பேருந்து நிலையங்களில் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கும் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்த அவர், சென்னை பெருநகர மாநகரத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்வதாக' தெரிவித்தார்.
வலுக்கும் கோரிக்கைகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் செவி சாய்க்கப்பார்களா?: மேலும் இது குறித்து மூத்த எம்.டி.சி அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது, 'இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே, சில ஊழியர்களை நியமித்துள்ளோம். அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மாநகர பேருந்துகளை விரும்புவதால், பணியாளர்கள், குறிப்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு இதுபோன்ற நடைமுறைகளைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளோம்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநகர போக்குவரத்து கழகம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 30 முதல் 50 புகார்களைப் பெறுவதாகவும் அவ்வாறு பெறும் புகார்களின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும் கூறினார். இதுபோன்ற புகார்களுக்கு, சோதனை அதிகாரிகள் விதிமீறல்களைக் கண்டறிந்தால் அல்லது பயணிகள் எம்.டி,சி இணையதளத்தில் விவரங்களுடன் புகார் செய்தால், ஓட்டுநர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவார்கள்' என்று கூறியுள்ளார்.
சென்னை நகரத்தில் சுமார் 1 லட்சம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகள் அனைத்தும் குறிப்பாக, ஷேர் ஆட்டோக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து உரிமம் பெற வேண்டும். ஆனால், இதனை குறிப்பிட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே, ஷேர் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் அதிக பயணிகளை ஏற்றுவதும், நீண்ட நேரம் பயணிகளுக்காக பேருந்து நிலையங்களில் காத்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது. இந்தப் பிரச்னையை போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்வார்களா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: மளிகை பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதி: அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!