சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை ரத்துசெய்து நால்வரையும் விடுதலை செய்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது. ஆனால், அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால், மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா சிறையிலிருந்த காலத்தில் நன்னடத்தை காரணமாக விரைவில் விடுதலையாவார் என்ற தகவல் வெளியானது. இருப்பினும், அவர் விடுதலையாகவில்லை. அவர் விரைவில் வெளிவருவார், தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும் என பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த முனைவர் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவருவார் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு வருட சிறைவாசத்தின் அடிப்படையில் சசிகலா அடுத்தாண்டு பிப்ரவரி மாதம்தான் விடுதலையாவார். ஏனெனில், அவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதிதான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சிறை சென்று தற்போது மூன்று வருடங்கள் 4 மாதங்களே ஆகியுள்ளன.
இதையும் படிங்க: சசிகலாவின் பினாமி வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு