சென்னை: வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் அன்பழகன்(61). இவர் கடந்த 5ஆம் தேதி திருக்கழுக்குன்றம் சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் தாம்பரம் பேருந்து நிலையம் வந்து இறங்கியுள்ளார்.
அப்போது தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்த இரண்டு நபர்கள் அன்பழகனிடம் சென்று தங்களுக்குத் தற்போது அவசரப்பண தேவை உள்ளது எனக் கூறி தங்களிடம் இருக்கும் விலை உயர்ந்த ராசி கல்லை உடனே விற்க உள்ளோம் என்றும்; அதனை தாங்கள் வாங்கிக்கொண்டு தங்களுக்குப் பணமோ அல்லது நகையோ கொடுத்தால் போதும் என்றும்; இந்த ராசிக்கல் பல லட்சம் மதிப்புடையது எனவும் ஆசை வார்த்தைகளை இருவரும் கூறியுள்ளனர்.
பல லட்சம் மதிப்புடைய ராசிக்கல் என இருவரும் கூறியதை நம்பிய அன்பழகன் தான் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச்சங்கிலி மற்றும் தங்க மோதிரங்களை கொடுத்து, அந்த ராசிக்கல்லை வாங்கி உள்ளார்.பின்னர் அங்கிருந்து இருவரும் உடனடியாக சென்றுள்ளனர். அதன்பின், அன்பழகன் வீட்டிற்குச்சென்று பரிசோதித்து பார்த்தபோது அவர்கள் கொடுத்த ராசிக்கல் போலியானது எனத் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அன்பழகன் இது குறித்து தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி இரண்டு மர்ம நபர்களையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஜமால் நாசர்(64), அந்தி ரியாஸ் (51) ஆகிய இருவரையும் தாம்பரம் போலீசார் கைது செய்து அன்பழகனிடமிருந்து மோசடி செய்து வாங்கிச்சென்ற தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச்சென்று வேறு எங்கெல்லாம் மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் - எச்சரித்த சுப.வீ