சென்னை புதிய அண்ணாநகர், என்எஸ்சி போஸ் தெருவைச் சேர்ந்தவர் சியாமளாதேவி (39). இவரது தம்பி சுரேஷ் (38). இவர்கள் இருவரும் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். சுரேஷ்குமார் வீட்டு மாடியில் கண்ணம்மாள் (65) என்பவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சியாமளாதேவி, கண்ணம்மாளிடம் வந்து தான் ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்துவிட்டதாகவும், சீட்டு போட்டவர்கள் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர் என்று கவலையுடன் கூறியுள்ளார்.
இதனால், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை சியாமளாதேவிக்கு கண்ணம்மாள் கடனாகக் கொடுத்துள்ளார். இதனோடு, மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மாதாந்திர சீட்டும் அவரிடம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில், ஏலச்சீட்டு முடிந்ததும் சியாமளாதேவி ரூ.2 லட்சம் பணத்தையும், ஏற்கனவே கண்ணம்மாளிடம் கடன் வாங்கிய ரூ.2 லட்சத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, கண்ணம்மாள் பல முறை சியாமளாதேவியிடம் கொடுத்த பணத்தை திரும்ப தரக் கேட்டும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த தகராறு மோதலாக மாறிய நிலையில், பிப்ரவரி மாதம் சியாமளாதேவி, அவரது தம்பி சுரேஷ், அவரது மனைவி ஜெயா ஆகிய மூவரும் கண்ணம்மாள் குடியிருந்த வீட்டு பொருட்களை சேதப்படுத்தி, அவரை வீட்டை விட்டு தூரத்தியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளான கண்ணம்மாள் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
இதன் பின்னர், திருமுல்லைவாயில் ஆய்வாளர் புருஷோத்தமன், எஸ்.ஐ சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்ணம்மாளிடம் பண மோசடி செய்து, வீட்டு பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த சியாமளாதேவி, சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சுரேஷின் மனைவி ஜெயா என்பவரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.