டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், ராம்நாத் கோவிந்த் பங்கேற்று வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் 19 வீரர்கள் அர்ஜூனா விருது பெற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனும் அர்ஜூனா விருதை பெற்றுக்கொண்டார். 1999ஆம் ஆண்டு டி.வி. பவுலி, பாடி பில்டிங் பிரிவில் அர்ஜூனா விருது பெற்றிருந்தார். 20 வருடங்களுக்குப் பிறகு இந்த உயரிய விருது பாடிபில்டர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அர்ஜூனா விருது பெற்று தமிழ்நாடு திரும்பிய பாடிபில்டர் பாஸ்கரன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு மனமார்ந்த நன்றி, ICF பாடிபில்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 20 ஆண்டுகளுக்குப் பின் பாடிபில்டர் துறையில் விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் தன்னைப் போன்ற இளைஞர்களுக்கு மாநில அரசு வேலைவாய்ப்பை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.