சென்னை: 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ரூ.6,066 கோடி அளவிற்கு அதானி குழுமம் மற்றும் சிலர் சேர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தை சூறையாடிய ஊழல் புகாரை அறப்போர் இயக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வி.இறையன்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏற்கனவே அறப்போர் இயக்கம் இதற்கான ஆதாரங்களை ஆகஸ்ட் 2018 மற்றும் ஏப்ரல் 2019-லும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி இருந்தது. ஆனால், இன்றைய தேதி வரை பலமுறை அவர்களுக்கு நினைவுவூட்டியும் அதன் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். நம் மின்சார வாரியத்தில் இருந்து நிலக்கரி இறக்குமதி மூலமாக சூறையாடப்பட்ட பணம், அதானி போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டில் தான் வைத்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
ஹிண்டர்பர்க் ரெசெர்ச் (Hinderburg Research) வெளியிட்டுள்ள அறிக்கையில் பல வெளிநாடுகள் மூலமாக ஷெல் நிறுவனங்கள் மீண்டும் பணத்தை இந்தியாவிற்குள் அதானி நிறுவனங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து ஊழல் செய்து எடுக்கப்பட்ட பணமும் இவ்வழியில் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி ஊழல் மூலம் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் இழந்த 3000 கோடியையும் மற்றவர்கள் மூலம் இழந்த 3000 கோடியையும் ஆக மொத்தம் 6000 கோடி ரூபாய் ஊழல் பணத்தையும் உடனடியாக தமிழ்நாடு அரசு மீட்டெடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆதாரங்களில் எப்படி ஒரே மாதத்தில் ஒரே தரத்தில் நம் மின்சார வாரியமும், தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் பேப்பர் லிமிடெட் (TNPL) இருவரும் டெண்டர் போட்டு இறக்குமதி செய்த நிலக்கரியில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 19 டாலர் அதிகமாக வாங்கியதற்கான ஆர்.டி.ஐ (RTI) ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட இந்தோனேசியா அரசாங்கம் வெளியிட்ட சந்தை மதிப்புடனும் ஒப்பிட்டு இழப்புகள் காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் 6000 கிலோ கேலரி நிலக்கரி இறக்குமதி செய்கிறோம் என்று சொல்லிவிட்டு எப்படி நம் மின்சார வாரியத்தை ஏமாற்றி 4000 முதல் 6000 கிலோ கேலரிக்கும் குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்தார்கள். அதன் விளைவாக மூன்றில் ஒரு பங்கு சோதனை செய்த நிலக்கரியில் மட்டும் 800 கோடி ரூபாய் அபராதம் அதானி மற்றும் மற்ற இறக்குமதியாளர்கள் மீது போடப்பட வேண்டும் என சி.ஏ.ஜி (CAG) தனது அறிக்கையில் கூறியுள்ளது", என சுட்டிக்காட்டிய அறப்போர் இயக்கம் (டி.ஆர்.ஐ) DRI தன் விசாரணை அறிக்கையில் நிலக்கரி இறக்குமதியில் அதானி தமிழ்நாடு மின்சார வாரியம் போன்றவர்கள் எப்படி அதிக விலை கொடுத்து வாங்கி மோசடி செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ''இந்தோனேசியா அரசு வெளியிட்ட சந்தை மதிப்பையும் இணைத்துள்ளோம். இந்த அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டெண்டர் எடுத்த அதானி, சிங்கப்பூர் நிறுவனம் நம் பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு மின்சார வாரியம் போன்றவற்றில் செய்யும் ஊழல் நம் இந்திய நாட்டின் மீதும், அதன் இறையாண்மை மீதும் செய்யப்படும் தாக்குதலாகும்.
இந்தப் பணத்தை உடனே அதானி போன்றவரிடம் இருந்து மீட்டெடுத்து நம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை காப்பாற்றுவது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சரின் முக்கிய கடமையாகும். லஞ்ச ஒழிப்புத் துறை மூலமோ அல்லது தன்னிச்சையான ஒரு விசாரணை அமைப்பு அமைத்தோ இந்த ஊழல்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.