சென்னை: நெடுஞ்சாலை துறையில் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் டெண்டர் போடப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும். தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோயம்புத்தூர் உக்கடம் பாலம் ஒப்பந்தம் போன்றவற்றில் நடந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலரிடம் புகார் கொடுத்துள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டெண்டர் திறப்பதற்கு முன்பே யாருக்கு டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று 4 டெண்டர்களில் அறப்போர் இயக்கம், அப்போதைய நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு அனுப்பியும், அதை மீறி டெண்டர்கள் அவர்களுக்கு வழங்கிய ஆதாரம், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்ததன் ஆதாரம், எஸ்டிமேட் அதிகப்படுத்தப்பட்டு இதனால் ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தியதன் ஆதாரம் என அனைத்தும் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக இந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் வெற்றி பெற்ற KCP Engineers Pvt Ltd, SPK & Co மற்றும் அவர்களைச் சார்ந்த நிறுவனங்களை தற்போது வருமான வரித்துறை சோதனை செய்து 500 கோடிக்கு போலி செலவினங்கள் காண்பிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இவையும் விசாரிக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்கும் உள்ளதா என்பதை விசாரிக்க கோரி உள்ளோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 1998 மற்றும் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையில் உள்ள டெண்டர் விதிகள் 2000 இன் பல்வேறு பிரிவுகளை மீறுகிறது.
மூன்று டெண்டர்களும் டெண்டர் அழைக்கும் அதிகாரம், மேற்கண்ட டெண்டர்கள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. டெண்டர் புல்லட்டின் அல்லது டெண்டர் அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிடவில்லை. மேலும், டெண்டர் அழைப்பு அறிவிப்பு முதலில் வெளியிடப்படாததால் சாத்தியமான டெண்டர்களுக்கு அனுப்பப்படவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ரெய்டு!