சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், முதல் கட்ட கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்பட்டதையடுத்து காலியாக உள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் எனவும், அதற்கு தகுதியானவா்கள், இன்று (21.08.2023) திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 7612 இடங்களும், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 1475 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
முதல் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூன் 28 ந் தேதி முதல் ஜூலை 12ந் தேதி வரையில் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16 ந் தேதி வெளியிடப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கலந்தாய்வுக்கு பின்னர் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 119 இடங்களும், என்ஆர்ஐ மாணவர்களுக்கு 648 இடங்களும் என மொத்தம் 767 இடங்கள் காலியாக உள்ளது.
பிடிஎஸ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 818 இடங்களும் என மொத்தம் 903 இடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்பும் விதமாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
இந்த கலந்தாய்வில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்து இன்றும் (ஆகஸ்ட் 21), நாளையும் (ஆகஸ்ட் 22) பதிவு செய்யலாம் எனவும், இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களுள் தரவரிசை பட்டியல் 1 முதல் 25856 பெற்ற மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியல் 1 முதல் 13179 பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களும், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் வேறு கல்லூரியில் சேர்வதற்கு விரும்பினால் பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!