சென்னை: பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் யாரும் ராகிங் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை மொட்டை அடித்து கடுமையாகத் தாக்கிய விவகாரம் உயர் கல்வித் துறையில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கோவையில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு அந்த மாணவர் அறையிலிருந்த போது, சீனியர் மாணவர்கள் சிலர் அவருக்கு மொட்டை அடித்ததுடன், மது அருந்துவதற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று கல்லூரி விடுதியில் வைத்து மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு மாணவர், இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவரின் பெற்றோர் ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடமும், அப்பகுதி காவல் துறையிடமும் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்லூரி விடுதியில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணையில், சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவனை ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டதால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் 3 பேர், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 2 மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 2 என மொத்தம் ஏழு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது, "அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளாக ராகிங் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மற்ற கல்லூரிகளில் இது போன்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. கல்லூரி வளாகங்களில் ராகிங்கை தடுப்பது குறித்து விரைவில் கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்படும்.
கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் அதன் கண்காணிப்பைத் தீவிரப் படுத்த வேண்டும். விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங்கில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் சீனியர் மாணவர்கள் மீது கல்லூரி தரப்பிலிருந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அளவிற்குத் தண்டனைகள் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகங்களிலோ அல்லது வெளி இடங்களிலோ ராகிங்கில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என வந்துவிட்டேன்' - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!