சென்னை: தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட தட்பவெப்ப நிலையால் ஒரே நாளில் அதிக கனமழை பெய்துள்ளது எனவும், வரும் காலங்களிலும் குறைந்த நாட்களில் அதிகளவில் மழை பெய்யும் என அண்ணா பல்கலைக் கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் கொரியன் ஜோசப் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகளவில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்துள்ளது. அதிலும் குறிப்பாகக் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி கொட்டித் தீர்த்து வெள்ளக்காடாக மாற்றியது.
அதே போல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அதிக கனமழைக் கொட்டித் தீர்த்தது. இது போன்று ஒரே நாளில் அதி கனமழை பெய்ததற்கான காரணங்களை அண்ணா பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கையும் அளித்துள்ளனர்.
தட்ப வெட்பநிலை மாற்றத்தின் காரணமாக 2100 ஆண்டு வரையில் மழைப்பொழிவு மற்றும் வறட்சி எப்படி இருக்கும் எனவும் கணித்து அறிக்கை அளித்துள்ளனர். இது குறித்து, அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி வளாகத்தில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் கொரியன் ஜோசப் , ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, “உலகளவில் காலநிலை மாற்றம் மற்றும் தட்பவெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
தொழிற்சாலைகள் வராத 1850 ஆண்டிற்கு முன்னர் இருந்த தட்பவெட்ப நிலையுடன் தற்பொழுதைய நிலையை கணக்கில் எடுத்தால், தட்பவெட்ப நிலை 1.1 டிகிரி அதிகரித்து உள்ளது. தட்பவெட்ப நிலை அதிகரிக்கும் போது, கடலில் நீராவியும் அதிகரிக்கும். அதன் மூலம் மழைப்பொழிவும் அதிகரிக்கும். வரும் காலங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என அறிவியல் மூலம் கண்டறிந்து உள்ளோம். மேலும் மழைப்பொழிவு ஒரே மாதிரியாக அதிகரிக்காது.
குறைவான காலத்தில் அதிகளவில் கொட்டும் என காலநிலை மாற்றம் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் 100 ஆண்டிற்கு ஒருமுறை அதிகனமழை வந்தது போல், வரும் ஆண்டுகளில் 10 ஆண்டிற்கு ஒருமுறை அதிகனமழை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரியில் கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்சமாக பெய்த 450 மில்லி மீட்டர் மழை ஒரே நாளில் வந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 650 மில்லிமீட்டர் மழைப் பெய்துள்ளது. சில இடங்களில் 950 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டி மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது. இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தட்பவெட்பநிலை மாற்றத்தால் வந்துள்ளது. வரும் காலங்களிலும் இது போன்ற கனமழை வரும். ஒரு வருடத்தில் வர வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டும் போது, வறட்சியும் வரும்.
எனவே மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொண்டு, வறட்சிக்காலங்களில் பயன்படுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான இடங்களை விட்டு விட்டு, மேம்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 2100 ஆம் ஆண்டு வரையில் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து, வறட்சிக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஆய்வுச்செய்து, அரசிற்கு அளித்துள்ளோம்.
ஆய்வின் மூலம் 2100ம் ஆண்டு வரையில் 25 சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்காலத்தில் நடப்பதை உறுதியாக கூற முடியாது. தற்பொழுது உள்ள காலநிலை நிலவினாலும், மாற்றம் வராமலும் இருக்கலாம். நிலையான ஒருங்கிணைந்த வளர்ச்சி மேற்கொண்டால் மாற்றம் ஏற்படும். தட்பவெட்ப நிலை, மழைப்பொழிவு எவ்வளவு அதிகரிக்கும் என்பதை யாரும் கூற முடியாது. மழைப்பொழிவை இந்திய வானிலை ஆய்வு மையம் தான் கூற முடியும்.
கன்னியாகுமரிப் பகுதியில் புயல் இல்லாவிட்டாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருந்தது. அதன் தாக்கம் மற்றும் காற்றின் சுழற்சியால் அந்த பகுதியில் இருந்த மழை, அனைத்து பகுதியிலும் சேர்த்து கொட்டி உள்ளது. வரும் காலங்களிலும் இது போன்ற மழை பெய்யும். தட்பவெட்பத்தை குறைப்பதற்கு சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவை பயன்படும். இந்தளவிற்கு மழைப்பொழிவதற்கு காரணம் நிலக்கரி பயன்படுத்தி கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடுவதே ஆகும்.
200 ஆண்டிற்கு முன்னர் கார்பன்டை ஆக்ஸைடு 270 பிபிஎம் இருந்தது. ஆனால் தற்பொழுது இரண்டு மடங்காக அதிகரித்து 440 பிபிஎம் என்று உள்ளது. எரிசக்திக்கு அதிகளவில் பெட்ரோல், நிலக்கரி போன்ற பொருட்களை பயன்படுத்துகிறோம். அதனை குறைப்பதற்கு உலகளவில் பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2050 ஆண்டிற்குள் கார்பன்டை ஆக்ஸைடு குறைக்க வேண்டும்.
அதற்கு அதிகளவில் மரங்களை நட வேண்டும். கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்தது தான் அதிகனமழை ஒரே நாளில் பெய்ததற்கு காரணமாகும். தட்பவெட்பநிலை தற்பொழுது 1.1 டிகிரி அதிகரித்துள்ளது என்பது 2030 ஆண்டிற்குள் 1.5 டிகிரியாக அதிகரிக்கும். 2100 ஆம் ஆண்டில் 4.5 டிகிரி முதல் 5 டிகிரி வரையிலும் அதிகரிக்கும். தட்பவெட்பநிலை அதிகரித்தால் புவியும் பாதிக்கப்படும். அதனை தவிர்க்க மரம் நடுவதுடன், சூரிய சக்தி பயன்பாடு, காற்றாலை போன்றவற்றை அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடற்கரைகளில் காற்றாலை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர் தேக்கங்களை சரிசெய்து, தண்ணீர் சேமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 23 சதவீதம் மட்டுமே மரங்கள் இருக்கிறது. அதனை 33 சதவீதமாக மாற்ற, முயற்சி செய்து வருகிறோம். இதனால் உடனடியாக பலன் கிடைக்காது. வரும் காலங்களில் தட்பவெட்பநிலை மாற்றத்தை கொண்டு வரலாம். உலகளவில் கார்பன்டை ஆக்ஸைடை குறைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களைத் திக்குமுக்காட வைத்த மழை! மீட்புப் பணி நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் தகவல்!