சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்பல் 12ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார். வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராக நியமனம் செய்யக்கூடாது என அப்போது எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் இந்தாண்டு ஏப்ரல் 11ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் குழுவின் தலைவராகவும், ஆளுநரின் நியமன உறுப்பினராகவும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினராக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜனும், அரசின் நியமன உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஷீலா ராணி சுங்கத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைவேந்தர் தேடுதல் குழுவின் உறுப்பினர்களுக்கு அதற்கான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் குழுவிற்கான ஒருங்கிணைப்புகுழு அலுவலர் நியமனம் செய்யப்பட்டபின், பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் கடந்த ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்கு குழு அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.