சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விபின் (58). இவர் தென்னக ரயில்வே துறையில் பணியாற்றிவந்துள்ளார். அப்போது துறையின் அனுமதியின்றி ஆந்திராவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டுவரை சட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இவர் போலியான வருகைப்பதிவு சான்றிதழை கல்லூரியில் காட்டி சட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இதனையறிந்த தமிழ்நாடு வழக்குரைஞர்கள் கழகத்தில் விபின் வழக்கறிஞராக பதிவுசெய்த மனுவை நிராகரித்தனர். இதனால் விபின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான உலகநாகன், மோகன் தாஸ் ஆகிய இருவரிடம் கையூட்டு கொடுத்து குறுக்கு வழியில் வழக்கறிஞராகப் பதிவுசெய்ய முயற்சித்துள்ளார். இந்நிலையில், கழக செயலாளர் ராஜாகுமார் உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விபின், உலகநாதன், மோகன்தாஸ் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பின்னர் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றம்செய்யப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு காவல் துறை விபினுக்கு போலியான வருகைப்பதிவு சான்றிதழ் அளித்த ஆந்திர கல்லூரி முதல்வர் ஹிமவந்த குமாரிடம் விசாரணை மேற்கொண்டது.
இதில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு செல்லாமலேயே அனைவரும் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும் என்று போலியான ஆவணங்கள், போலியாக வருகைப்பதிவு சான்றிதழ் அளித்து சட்டப்படிப்பு முடிக்க உதவிபுரிந்தது தெரியவந்தது. இதனால் எஸ்.பி.டி.ஆர்.எம். (SBTRM) சட்டக்கல்லூரி முதல்வர் கடப்பா பகுதியைச் சேர்ந்த ஹிமவந்த குமார் (54) என்பவரை மத்தியக் குற்றபிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும், இதேபோன்று பலர் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் கழகத்தில் போலியான சான்றிதழ் கொடுத்து வழக்கறிஞர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020: அதிக செலவு & சரியாக செலவு