சென்னை: மெட்ராஸ் லைப்ரரி அசோசியேசன் சார்பில் ஆண்டு பொதுக்கூட்டம் முன்னதாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி விருதுகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் தமிழ்நாட்டில் பழுதடைந்த நூலகங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகங்கள் சொந்தக் கட்டடத்தில் செயல்பட நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை சுழற்சி முறையில் திறப்பதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அந்த நெறிமுறைகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சுழற்சிமுறையில் வகுப்புக்கு வருதல் போன்றவை இடம்பெறும்.
மாணவர்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் திமுகவின் இலக்காகும். ஆனால் அதே நேரத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது இணையதளம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2021: புதுமையை புகுத்தியிருப்பாரா பிடிஆர்... ஓர் அலசல்!