சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம், பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் ‘பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1,400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இத்துடன் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படும். அது மட்டுமல்லாமல் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும்.
மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக தொடர்ந்து ஜனநாயக யுத்தம் நடத்துகிறது - தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்