சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
அதனால் ஏரியில் இருந்து பல்வேறு கட்டங்களாக உபரி நீர் 100 முதல் 8 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது. இவ்வாறு ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் படப்பை, ஆதனூர், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவை நிறைந்தது. அவ்வாறு நிறைந்து வெளியேறிய மொத்த தண்ணீரும் சேர்ந்து, அடையாறு ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்காக ஓடியது.
ஒரே நேரத்தில் பல ஆயிரம் கன அடி உபரிநீர் அடையாறு ஆற்றில் கலந்ததால், ஒரு கட்டத்தில் அனகாபுத்தூரில் அமைந்துள்ள அடையாறு ஆற்றுப் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்லத் தொடங்கியது. இதன் காரணமாக அடையாறு ஆற்றுப் பாலத்தின் கைப்பிடி தூண்கள் மற்றும் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் ஆகிய அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தற்காலிகமாக அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப் பாலத்தை போலீசார் தடுப்புகளை அமைத்து மூடி, அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.
பாலம் பழுது காரணமாக போக்குவரத்து சேவையை நிறுத்தியதால், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் பல்லாவரம் - குன்றத்தூர் செல்லும் பிரதான சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் இருந்து குன்றத்துார், ஸ்ரீபெரும்புதூர், போரூர் செல்வதற்கும், குன்றத்துாரில் இருந்து அனகாபுத்தூர், பல்லாவரம், தாம்பரம் செல்வதற்கும் பொதுமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் மற்றும் நேரம் அதிக அளவில் விரயமாவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற இறந்த விலங்குகளும், ஜன்னல், கதவு போன்ற மரச்சாமான்களும் அதிக அளவில் சென்ற வண்ணம் உள்ளது.
மேலும் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் பல்லாவரம் - குன்றத்துார் செல்லும் பிரதான சாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வடசென்னை முதல் தென் சென்னை வரை வடியாத வெள்ளம்… மீளாத தலைநகரம்…