சென்னை ராமாபுரம் மூன்லைட் நகரைச் சேர்ந்தவர் தயாளன் (69). இவருக்கு தமிழ்மொழி என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள் இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். தயாளன் தனது மனைவி, மகன், மற்றும் மருமகளுடன் ஓரே வீட்டில் வசித்து வந்தார். நேற்று (ஆக.23) மாலை தயாளனின் வீட்டில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் இரண்டு பூனைகள் தவறி விழுந்து இறந்தன.
பின்னர் தயாளன் தனது மனைவி தமிழ்மொழியுடன் சென்று கிணற்றுக்குள் இறந்து கிடந்த பூனையை கயிற்றின் மூலம் மேலே எடுக்க முயன்றுள்ளார். ஒரு பூனையை வெளியே எடுத்த நிலையில் மற்றொரு பூனையை எடுக்க முடியாததால் தயாளன் பைப்பை பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக தயாளன் தவறி கிணற்றில் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்மொழி உடனே கூச்சலிட்டார். இதனையடுத்து அங்கு ஓடிச்சென்ற அக்கம் பக்கத்தினர், தண்ணீரில் மூழ்கிய தயாளனை மீட்க முயன்றனர்.
ஆனால், முடியாமல் போனதால் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு பின்னர் தயாளன் உடலை வெளியே கொண்டு சென்றனர்.
இதனையடுத்து ராமாபுரம் காவல் துறையினர், தயாளன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தயாளன் கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கிய போது விஷவாயு தாக்கியதால் மயங்கி தண்ணீரில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தீரா கடன் தொல்லை ஆறா வடுவாக மாறிய கொடூரம்.. பெற்ற மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை!