சென்னை: எண்ணூர் முகத்துவார பகுதியில் சிபிசிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் மற்றும் அதன் எண்ணெய்க் கழிவுகளால் கடல் பகுதி, மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத்தாயகம் தன்னார்வ அமைப்பு சார்பில் எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் டிச.26 நடைபெற்றது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனையை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தார். மேலும் மறைந்த டாக்டர் ஜெயச்சந்திரன் நினைவு மருத்துவமனை சார்பில் டாக்டர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழுவினரும் இதில் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் இருதயம், நுரையீரல், தோல், கண், பல் உள்ளிட்ட உடலுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு நோய் பாதிப்புகள் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "எண்ணூர் பகுதியில் எண்ணெய் மற்றும் ரசாயன கழிவுகள் கலந்ததிற்கான காரணம் குறித்து எந்த ஒரு நிறுவனமும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இப்பிரச்னை குறித்து இதுவரை விரிவான ஆய்வோ அல்லது முழுமையான விசாரணையையோ தமிழக அரசு நடத்தவில்லை. பொதுமக்கள் மட்டுமல்லாது கால்நடைகள், பறவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் உரிய தொழில்நுட்பங்களோ, நவீன கருவிகளோ பயன்படுத்தப்படவில்லை. காலநிலை மாற்றம் காரணமாக ஒவ்வொரு பருவமழை காலத்தின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்த வணிகக் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பிரச்னையில் ரூ.240 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய பிரச்னையில் எட்டரைக் கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களும் போதுமானது இல்லை" என குற்றம்சாட்டியுள்ளார்.
எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு;சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்: முன்னதாக, எண்ணூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. நள்ளிரவில் வாயு கசிவு ஏற்பட்டதால் பெரியக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பதற்றமடைந்துடன் கொத்துக் கொத்தாக அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலுக்கு ஆளான நிலையில், அரசு மருத்துவமனைளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேர் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் எண்ணூரில் அமோனியா வாயு கசிவு.. மூச்சுத் திணறலால் மக்கள் அவதி; 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!