சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்தவர் கயானி மாகர்லோ (26). இவர் அமெரிக்காவில் பார் உரிமையாளராக உள்ளார். இந்த நிலையில் கயானி, தனது நண்பரின் திருமணத்திற்காக நேற்றைய முன்தினம் (ஜன.25) சென்னைக்கு வந்துள்ளார். இதனையடுத்து மதியம் 12 மணியளவில், சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
பின்னர் அன்றிரவு, மயிலாப்பூர் டிடிகே சாலையில் உள்ள பாரில் நடந்த மது விருந்தில் பங்கேற்றுள்ளார். அப்போது கயானி அதிக போதையில் இருந்ததால், அங்கிருந்தவர்கள் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் காயமடைந்த கயானியை, பார் ஊழியர்கள் வெளியே அனுப்பி உள்ளனர். இதனையடுத்து அவரது நண்பர், கயானியை விடுதியில் விட்டுச் சென்றார்.
இதன் பின்னர் விடுதி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். எனவே இதுகுறித்து பெரியமேடு காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விடுதிக்கு வந்த ஆம்புலன்ஸில் கயானி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்போது ரிப்பன் பில்டிங் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடனும் சண்டையிட்ட கயானி, ஆம்புலன்ஸ் கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று கார் பார்க்கிங்கில் மறைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கயானியை பிடித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கயானியிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், இதுதொடர்பாக அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆண் நண்பரிடம் பேசுவதை கண்டித்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி தற்கொலை முயற்சி!