ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 30 நாட்களில் 2,85,150 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 2,68,30,954 லட்சத்தை வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை
மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து இன்றோடு ஒரு மாதத்தை எட்டியுள்ளதால் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளின் விவரத்தை காவல் துறை வெளியிட்டுள்ளது. அந்த விவரம் பின்வருமாறு:
- பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள் - 2 லட்சத்து 68 ஆயிரத்து 537
- கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டவர்கள் - 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர்
- பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள்
- வசூலிக்கப்பட்ட அபராத தொகை - ரூ2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 954
இதில் நேற்று மட்டும் 1.22 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.