மாநிலத்தில் அதிவேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் 40 நாள்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தது.
அப்போது, ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகள் முற்றிலுமாக கணினிமயமாக்கப்படுகிறது எனவும், இதற்கான டெண்டர் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 175 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ரூ.36 கோடிக்கும், மதுரையில் ரூ.41 கோடிக்கும், சேலத்தில் ரூ.38 கோடிக்கும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கும், திருச்சியில் ரூ.39 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.