சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பதிவுகள் அண்மைக் காலங்களாக தினந்தோறும் தொடர்ந்து வெளியாகிவருகிறது.
அதன்படி, நேற்று (ஜூலை 19) சென்னை மாநகராட்சி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ”அன்புள்ள சென்னை வாசிகளே... கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுக்கான உதவிக் குறிப்புகள்" எனக் குறிப்பிட்டு, "ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்க்கவும் அல்லது அதனை குறைந்தபட்சமாக அருந்துங்கள்" எனப் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சியின் இந்த ட்விட்டர் பதிவிற்கு மது குடிப்போர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், "மது குடிப்போர் அளவாக மது அருந்துங்கள் என மது குடிப்போர் மீது அக்கறை காட்டியுள்ள சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தப் பதிவை, எங்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். அதே சமயத்தில் அளவாக மது அருந்துங்கள் என்று சொல்லும் மாநகராட்சி நிர்வாகத்தின் விழிப்புணர்வை நாங்கள் மதிக்கத் தயாராக இருந்தாலும், சென்னையில் மது எங்கே கிடைக்கிறது என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
சென்னையில் மதுவே விற்கப்படாத நிலையில், அளவாக அருந்துங்கள் என்று கூறினால் நாங்கள் என்ன செய்வது. சென்னையில் அளவாக அருந்துவதற்கு மது கிடைக்காமல் சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் லட்சக்கணக்கான மது குடிப்போர் வருத்தத்தில் உள்ளோம் என்பதையும், சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திற்கு இந்த நேரத்தில் பதிவு செய்யக் கடமைப் பட்டுள்ளோம்" என்றார்.
இதனிடையே, சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் மது குடிப்போருக்காக பதிவிடப்பட்ட ட்வீட்டை சென்னை மாநகராட்சி நீக்கியுள்ளது.
இதையும் படிங்க:மது வாங்க வந்தவரை நையப்புடைத்த காவலர்கள்: வைரலாகும் காணொலி