சென்னை: நங்கநல்லூரை சேர்ந்த ஜெயந்தன், சென்னை விமான நிலையத்தில் உள்ள தாய்லாந்து விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கடந்த மார்ச் 19-ந்தேதி சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்வதாக அவரின் சகோதரியிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வராததால் ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் காணாமல் போன தனது சகோதரன் ஜெயந்தனை கண்டுபிடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் இருவர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்.
இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ததில், விமான நிறுவன ஊழியரான ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த செம்மாளம்பட்டியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரைப் பார்க்கச் சென்றபோது அங்கு அவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஜெயந்தனின் உடல் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொலை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் இரு கார்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்!