அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது, "நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டப்பேரவைத் தேர்தல் வேறு என தமிழ்நாடு மக்கள் பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி திமுக வெற்றி பெற்றது. ஆனால் இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். நேரடியாக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலினுக்கு தில்லு கிடையாது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்பு மூன்று மாதம், ஆறு மாதம் என்றார்கள். ஆனால், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. மறைமுகமாக ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சி பொதுமக்களை தூண்டிவிட்டு எண்ணற்ற போராட்டங்களை நடத்தினர். அதையெல்லாம் சமாளித்து அமைதியான சுமூகமான ஆட்சியை நடத்துகிறோம். ஒரு சிலர் கட்சி தொடங்காமலேயே விமர்சித்து பேசுகின்றனர்.
யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை. கடலிலுள்ள உப்பை போல டிடிவி தினகரன் கட்சி கரைந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு அடிமையென ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக அரசு யாருக்கும் அடிமை கிடையாது. மத்தியில் இணக்கமான உறவு வைத்ததால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆறு புதிய மருத்துவமனைகள் கொண்டு வந்துள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை வாரி வழங்கும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்து நல்ல வேட்பாளர்களை களத்தில் இறக்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முழு அளவில் தலைமைக் கழகம் உறுதுணையாக இருக்கும். 2021 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: இலங்கை அதிபரின் நடவடிக்கையை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை!