சென்னை: அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இறுதியாக ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக் கூட்டத்திலேயே பொதுச்செயலாளர் தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் அதற்கான உட்கட்சி தேர்தல் அலுவலர்களையும் நியமனம் செய்திருந்தனர். அதற்கான நடவடிக்கையாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் பெறும் பணியை உட்கட்சி தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தீர்ப்பு வருவதற்கு முன் பொதுக்குழு உறுப்பினரிடம் உறுதிமொழி பத்திரம் பெறும் பணியில் ஈபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொதுச்செயலாளர் தேர்தலை விரைந்து முடித்து, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இறுதி யுத்தத்திற்கு டெல்லி செல்லும் ஈபிஎஸ்..! கலக்கத்தில் ஓபிஎஸ்..! மத்தியில் ஆதரவு யாருக்கு?