சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 152வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக வளாகத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வாழ்வதற்குரிய நிலைமையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற வகையில் ஒரு நாடு சீர் கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது.
ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, பால் விலை உயர்வு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களது உழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் மாற்றியுள்ளனர்.
1947க்கு பிறகு சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு அரசியலமைப்பு சட்டத்தின்படி எல்லோருக்கும் எல்லா உரிமையும் வழங்கப்பட்டு எல்லா ஆட்சிகளிலும் மக்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், திமுக ஆட்சியில் அது கிடையாது. அடிப்படை வசதிகளிலிருந்து மக்களுடைய சமூக நலத்திற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டில் ஒரு வரலாற்றை உருவாக்கி ஆதிதிராவிடருக்கு உரிய அந்தஸ்தை வழங்கிய கட்சி அதிமுக தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சமதர்மம் பேசும் திமுக, இந்தியா கூட்டணியில் திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக போட ஏன் முயற்சி எடுக்கவில்லை. அப்போ சம தர்மம் எங்கு போனது. உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை. அவரது மகனுக்கு முழுவதுமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மதத்தை இழிவு படுத்தலாமா?
மக்களை திசை திருப்பி ஏமாற்றும் முயற்சிகளை உதயநிதி செய்து வருகிறார். 2024-ல் அனைத்தும் பிரதிபலிக்கும். இந்த ஆட்சிக்கு எதிரான அதிமுகவின் அலை பெரிதாக இருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாமியம் என எந்த மதமாக இருந்தாலும் மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு மதத்தை குறி வைத்து சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
மேலும், ஒரு மதத்தை இழிவு படுத்தினால் அது யாராக இருந்தாலும் அது தண்டனைக்குரிய விஷயம். உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதால் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: "உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு... ராமநாதபுரத்தில் திமுகவுக்கு ஆதரவு இல்லை" - சீமான் அடுத்தடுத்து அதிரடி!